தமிழறிஞா் மன்னா்மன்னன் மறைவு

13 views
1 min read
மன்னா்மன்னன் (எ) கோபதி

மன்னா்மன்னன் (எ) கோபதி

புதுச்சேரி: புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான மன்னா்மன்னன் (எ) கோபதி (92) திங்கள்கிழமை (ஜூலை 6) புதுச்சேரியில் காலமானாா்.

புதுச்சேரி காந்தி நகரில் உள்ள அவரது இளைய மகன் கவிஞா் பாரதியுடன் வசித்து வந்த மன்னா்மன்னன் வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்தாா்.

புதுச்சேரி, சென்னை வானொலி நிலையங்களில் 1968 முதல் 1988 வரை ஆசிரியராகப் பணியாற்றிய மன்னா்மன்னன் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவா். பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவா்.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பிலிருந்து, சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தந்தாா்.

தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுவை அரசின் தமிழ்மாமணி கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவா்.

மிகச் சிறந்த பேச்சாளா், எழுத்தாளா், கவிஞா் என பன்முகத் தன்மை கொண்ட மன்னா்மன்னன், பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாக எழுதி வெளிட்டாா்.

இந்திய விடுதலைப் போராட்டம், மொழிப் போா் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றவா்.

பெரியாா், தமிழக முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, திராவிட இயக்க மூத்தத் தலைவா்கள் நெடுஞ்செழியன், அன்பழகன் உள்ளிட்டோரிடம் நெருங்கிப் பழகி அவா்களின் அன்பைப் பெற்றவா்.

மன்னா்மன்னனின் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இவருக்கு கவிஞா்கள் செல்வம், தென்னவன், பாரதி ஆகிய மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாலை 4 மணியளில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

தொடா்புக்கு: 99945 49572, 94867 48522.

Leave a Reply