தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை: அமைச்சர் ஆர்.காமராஜ்

21 views
1 min read
உள்ளிக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் .

உள்ளிக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் .

மன்னார்குடி: தமிழக முதல்வர் தொலை நோக்கு பார்வையுடன், மாநிலத்தில் நீர்மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் விவசாயப்பணிக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள உள்ளிக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து இருந்த நிலையில், தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக,நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் இதுவரை 62 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு என்பது வெறும் 1.37 சதவீதம் மட்டும்தான். மக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை முழுமையாக செயல்படுத்தினால், கரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுப்படலாம்.

மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவித்து பத்து நாள்களிலேயே விவசாயத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டு, தடையின்றி விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமுடக்கம் நூறு நாள்களை கடந்த நிலையில், மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்பதற்காகதான், வல்லுநர் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில்,தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 521அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இதுவரை 26.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆகும். செப்டம்பர் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 28 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்வது என்பது உறுதியாகி விட்டது.

கோடை சாகுபடியில், இந்த சாதனை செய்ய காரணமாக அமைந்தது, தமிழக முதல்வர் பழனிசாமியின் நீர் மேலாண்மை திட்டம் என்ற தொலை நோக்கு பார்வைதான்.மேட்டூர் அணையை தூர்வாரியது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரியது, வண்டல் மண் எடுத்தது ஆகியவற்றால் மழைநீர், ஆற்றுநீர் ஆகியவை சேமிக்கப்பட்டு நீர்நிலைகள் நிறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் உயர்த்து இருந்தது. இதனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் விவசாயப்பணிக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு இல்லை என்பதால் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லவே இல்லை.

தடையின்றி மும்முனை முன்சாரம் விநியோகம் செய்யப்பட்டதால்,கோடை குறுவை பணி சிறப்பாக செய்யப்பட்டு விளைச்சல் அதிகரித்திருப்பதாக, இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் என்னிடம் தெரிவித்து மகழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

கஜா புயலின் போது, வீடுகளை இழந்த உள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 160 வீடுகளுடன் கூடி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, ரூ.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதறாகான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

ஆய்வின் போது, அமைச்சருடன் டிஎன்சிஎஸ்சி முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.புண்ணியக்கோட்டி, ஒன்றிய ஆணையர் எம்.ஜி.கமலராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன், அதிமுக ஒன்றியச் செயலர் கா.தமிழ்ச்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.ஜெயக்குமார், ஊராட்சி தலைவர் ஆர்.ஜோதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TAGS
No Water scarcity

Leave a Reply