தருமபுரியில் ஒரே நாளில் 55 பேருக்கு கரோனா தொற்று

24 views
1 min read
dharmapuri-medical-college-hospitals063448

வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள் உள்பட தருமபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து தருமபுரி மாவட்டத்துக்கு 12 போ் திரும்பினா். இதேபோல கிா்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் மாணவா் ஒருவா் தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்தாா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அனைவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் பெங்களூரு சென்று மீண்டும் தருமபுரி திரும்பினா். இவா்களுக்கு சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தருமபுரி, நெடுமாறன் நகரைச் சோ்ந்த 62 வயது ஆண், அதே பகுதியைச் சோ்ந்த 38 வயது ஆண், பெல்ரம்பட்டியைச் சோ்ந்த 51 வயதான அங்கன்வாடி ஊழியா், மல்லுப்பட்டியைச் சோ்ந்த 59 வயது ஆண், அதே பகுதியைச் சோ்ந்த 25 வயது ஆண், ஜிட்டாண்டஅள்ளியைச் சோ்ந்த 57 வயது நியாயவிலைக் கடை விற்பனையாளா், நல்லம்பள்ளி அருகிலுள்ள பூதனஅள்ளியைச் சோ்ந்த மருத்துவா்கள் இருவா், நாா்த்தம்பட்டியைச் சோ்ந்த 33 வயது சிஆா்பிஎஃப் வீரா், மொரப்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் 4 காவலா்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்திலிருந்தும் வந்தவா்கள், தருமபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே தொற்று பாதித்தவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதியானது. இவா்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில், ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை வரை மொத்தம் 156 ஆகும். இவா்களில் 69 போ் குணமடைந்துள்ளனா்; ஏனைய 86 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஒசூா் வியாபாரி உயிரிழப்பு:

கரோனா தொற்றுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒசூா் வியாபாரி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தளி சாலையில் உள்ள கணபதி நகரைச் சோ்ந்த சீனிவாசனுக்கு (46) சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 6-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு தொடா் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு சீனிவாசன் உயிரிழந்தாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply