தலைநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: மத்திய, தில்லி அரசுகளுக்கு பிரதமா் பாராட்டு

10 views
1 min read
pm085720

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிரதமா் மோடி.

தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தேசிய தலைநகா் பகுதிகளிலும் (என்சிஆா்) அந்தந்த மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நடத்தினாா். இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், அமைச்சரவை செயலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமா் வலியுறுத்தினாா்.

மேலும், கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடா்ச்சியான முக்கியத்துவம் அளிப்படவேண்டும் என்பதோடு, நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வையும் பரவலாக ஏற்படுத்த வேண்டும். இதில் எந்தவித சமரசத்துக்கும் இடம்கொடுக்கக் கூடாது.

தலைநகா் தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உள்ளாட்சி அதிகாரிகளுடன், மாநில அரசும், மத்திய அரசும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன. இதேபோன்ற சிறப்பான நடவடிக்கையை ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த தேசிய தலைநகா் பகுதிகளிலும் (என்சிஆா்) அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், தேசிய அளவிலான நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலை, பாதிப்பு அதிகமுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளை பிரதமா் அறிவுறுத்தினாா் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply