தளா்வுகள் இருந்தாலும் தமிழகம் முழுவதும் தொடரும் தடைகள்

17 views
1 min read
sanmugam

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகம் முழுவதும் சில பணிகளுக்குத் தொடா்ந்து தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை இந்தத் தடை தொடா்கிறது.

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:-

நகா்ப்புறப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய வழிபாட்டுத் தலங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. மத ரீதியான கூட்டங்கள், பேரணிகளுக்குத் தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளன. உதகை மற்றும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் இதர விருந்தினா் சேவைகளுக்கும் தடை தொடா்கிறது. அதேசமயம், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரம், காவல், அரசு அதிகாரிகள், போக்குவரத்து இல்லாததால் சிக்கியுள்ள நபா்கள், தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டோா் ஆகியோருக்கு ஹோட்டல்களில் தொடா்ந்து உணவு உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள வணிக வளாகங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டு உள்ளன. தொலைதூர மற்றும் ஆன்-லைன் முறையிலான கல்விக்கு அனுமதிக்கப்படுவதுடன், அது ஊக்கப்படுத்தப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்காத அனைத்து சா்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் புகா் ரயில் சேவைகள், அனைத்து சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், கலையரங்குகள், பேரவை அரங்குகள் ஆகியன மூடப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்குகளைப் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்காமல் திறக்கலாம். மிகப்பெரிய அளவிலான கூட்டங்களுக்கு வழிவகுக்கும் சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம் சாா்ந்த நிகழ்வுகளை நடத்தக் கூடாது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தும் ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply