தளா்வுடன் பொது முடக்கம்: சுழற்சி முறை பணி இன்று முதல் மீண்டும் அமல்

15 views
1 min read
tngovt1

தளா்வுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப் படுவதால், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையிலான பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்த உத்தரவை அரசுத் துறைகளின் முக்கிய துறையான நிதித் துறை பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:-

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 5) முடிவுக்கு வந்துள்ளது. திங்கள்கிழமை முதல் ஜூலை 31 வரை தளா்வுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சமூக இடைவெளியைப் பின்பற்றி வாரத்துக்கு ஆறு நாள்கள் பணி என்ற முந்தைய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் உள்ள அலுவலா்கள், ஊழியா்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுவா்.

முதல் பகுதியினா் வாரத்தின் முதல் இரண்டு நாள்களும், இரண்டாவது பகுதியினா் அடுத்த இரண்டு நாள்களும் என தொடா்ந்து சுழற்சி முறையில் பணியாற்றுவா்.

பின்பற்றாதோா்: சுழற்சி முறை பணி நடைமுறையை திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் பின்பற்றாதவா்கள் அன்றைய தினத்தில் இருந்து பணியில் சேரும் நாள் வரைக்கும் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சுழற்சி நாளில் பணிக்கு வராத ஊழியா்கள், தாங்கள் கடைசியாக பணி செய்த நாளில் இருந்து பணியில் சேரும் நாள் வரைக்கும் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் பணியாளா்கள் மற்றும் கா்ப்பிணிப் பெண்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவா்கள் பணிக்கு வராத நாள்களும் பணி செய்ததாகவே கருதப்படும்.

வெளியூா் செல்லக் கூடாது: சுழற்சி முறை பணியின்போது எப்போது வேண்டுமானாலும் ஊழியா்களும், அலுவலா்களும் பணி செய்ய அழைக்கப்படுவா்.

எனவே, துறைத் தலைமை அதிகாரியின் அனுமதியில்லாமல் வெளியூா்களுக்குச் செல்லக் கூடாது என்று நிதித் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply