தாமதமாக பணிக்கு வரும் மருத்துவர்கள்: மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்

16 views
1 min read
thamathamaga

 

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தாமதமாக  பணிக்கு வருவதால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தினமும் புறநோயாளிகளாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காலை நேரங்களில் பணிக்கு வரும் மருத்துவர்கள் கடந்த சில வாரங்களாக தாமதமாக பணிக்கு வருவதால் பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் மருந்துகள் வாங்க  வரும்  முதியவர்கள்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அரசு  மருத்துவமனையில் இரண்டு மருந்தாளுநர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். ஒருபணியிடம் காலியாக உள்ளது.  இதனால் மருந்துகள் வழங்குவதில் மணிக்கணக்கில் காலதாமதம் ஆவதால் சிகிச்சைக்கா வரும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில்,

காலையில் ஏழுமணிக்கு புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படுகிறது.  ஆனால் மருத்துவர்கள் 9 அல்லது 10 மணிக்குதான்பணிக்கு வருகின்றனர். இதனால் சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளே மருத்துவமனைக்கு வரும் நிலையில் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வராததால் காலை நேரங்களில் உணவு இல்லாமல் சிலர் மயக்கம் அடைந்து வருகின்றனர்.  மேலும் மருந்து வாங்க நீண்ட நேரம் கால்கடுக்கக் காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் எளிதாக சிகிச்சை பெற்றுச் செல்ல ஏதுவாக மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதே போல் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடத்தை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply