தாராபுரத்தில் பெண் நெசவாளர்கள் சாலை மறியல்

19 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_2

சாலை மறியலில் ஈடுபட்டபெண் நெசவாளர்கள்

 

தாராபுரத்தில் நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து பெண் நெசவாளர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தை அடுத்த தேர்பட்டி, மணக்கடவு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் நெசவாளர்கள் புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வரும் நுண் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது: எங்கள் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளோம். இந்தக் கடன்களுக்கு மாதந்தோறும் வட்டியுடன் சேர்த்து மாதத்தவணைகளை செலுத்தி வந்தோம். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை வாய்ப்பை இழந்துள்ளதால் தவணைத்தொகைகளை சரிவரச் செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், நாங்கள் கடன் வாங்கிய நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பி அபராதத் தொகையுடன் செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கின்றனர். ஆகவே, கடன்களைத் திருப்பிச் செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அபராத வட்டி வசூலிக்கக்கூடாது என்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த நுண் நிதி நிறுவன அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதன்கிழமை கிராமத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தனர். இதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

TAGS
Female weavers

Leave a Reply