தாராபுரத்தில் விவசாயி தற்கொலை விவகாரம்: தனியார் வங்கி முற்றுகை

13 views
1 min read
thara

 

திருப்பூர்: விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

தாராபுரம் அருகே உள்ள குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55), இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு கடன் பெற்றிருந்தார். 

இந்த நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரால் கடனை சரிவர திருப்பிச் செலுத்த இயவில்லை. இதனிடையே, தனியார் வங்கி அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்தக்கோரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜாமணி விஷமாத்திரை சாப்பிட்டு கடந்த சில நாள்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குண்டம் காவல் துறையினர் வங்கி அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர்: இதனிடையே விவசாயி தற்கொலைக்குக் காரணமாக வங்கி அதிகாரிகளைக் கைது செய்யக்கோரி தாராபுரத்தில் உள்ள தனியார் வங்கியை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். 

மேலும், ராஜாமணி வாங்கிய அனைத்துக் கடனைகளையும் தள்ளுபடி செய்வதுடன், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். இதில், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர், திமுக, காங்கிரஸ் ,தேமுதிக ,உழவர் உழைப்பாளர் கட்சி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர். 

அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வரும் ஜூலை 13 ஆம் தேதி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Leave a Reply