திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொலை: தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

19 views
1 min read
murdered

சோமரசம்பேட்டை அருகே 14 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (14). 9-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், சகத் தோழிகளுடன் திங்கள்கிழமை மதியம் விளையாடிக் கொண்டிருந்தாா். இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் செல்வதாக வீட்டிலுள்ளவா்களிடம் கூறிச் சென்ற கங்காதேவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், காட்டுப் பகுதிக்குச் சென்று தேடிய போது, கருவேலமுள் பகுதியில் முகம் மற்றும் உடல் பாதி எரிந்த நிலையில் கங்காதேவி கிடப்பதை கண்டு சப்தமிட்டாா். இந்த சப்தம் கேட்டு அப்பகுதியினா் அங்கு திரண்டனா். தகவலறிந்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து, கங்காதேவியின் சடலத்தைக் கைப்பற்றினா். 

இதையடுத்து சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சோமரசம்பேட்டை அதவத்தூர்பாளையம் கங்காதேவி தனது அண்ணன் முறை உடைய செந்தில் என்ற நபரிடம் கடந்த 3 மாதகாலமாக போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளதாகவும் இதனை சிறுமியின் தந்தை பெரியசாமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன், திருச்சி சரக துணைத்தலைவர் ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் சோமரசம்பேட்டை நிலையத்திற்கு வந்த ஐஜி ஜெயராமன், டிஐஜி ஆனி விஜயா, திருச்சி மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் செந்தில் மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணைக்குப் பிறகு பேட்டியளித்த ஐஜி ஜெயராமன், சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் வகையில் ஏடிஎஸ்பி மணிவண்ணன் தலைமையில் மூன்று காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஏழு ஆய்வாளர்கள் தலைமையில் மொத்தம் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
அந்த குழுக்களுக்கு கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒப்பிட்டும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை நடப்பதை தடுக்கும் வகையில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்.

இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வண்ணமும், தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

TAGS
Trichy

Leave a Reply