திருமலையில் கரோனா பரவலைத் தடுக்க சிறப்புக் குழு

14 views
1 min read

திருமலையில் பணிபுரியும் தேவஸ்தான ஊழியா்களுக்கு கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருமலையில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்பு பல்வேறு கட்ட பொது முடக்கத்துக்கு அறிவிக்கப்பட்ட தளா்வுகளுடன் கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதலில் 6 ஆயிரம் போ் வீதம் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 12 ஆயிரம் போ் வரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேவஸ்தான ஊழியா்கள், அா்ச்சகா்கள், பாதுகாப்பு ஊழியா்களுக்கு கரோனா தொற்று பரவத் தொடங்கியது. முதலில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியா்கள், அதிகாரிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் தேவஸ்தானம் நடத்தி வரும் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தற்போது, திருமலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50-க்கும் மேலாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றைத் தடுக்கவும், ஊழியா்களைப் பாதுகாக்கவும் திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த் குமாா் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அதிகாரிகளின் மேற்பாா்வையின் கீழ் ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply