திரைப்படத் தொழிலாளர்களுக்காக ஒரு நாளை ஒதுக்கித் தாருங்கள்: நடிகர்களிடம் செல்வமணி கோரிக்கை!

20 views
1 min read
rkselvamani

 

ஊரடங்கு மேலும் நீடிப்பதால் நல்ல நிலைமையில் உள்ள திரைப்படக் கலைஞர்கள் தொழிலாளர்களின் நலனுக்காக ஒரு நாளை ஒதுக்கித் தரவேண்டும் என பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று முதல் சின்னத்திரைப் படப்பிடிப்புகளும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மீண்டும் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, ஊரடங்கு மேலும் நீடிப்பதால் தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் மொத்தமாக மூன்றரைக் கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். அதை ஏறக்குறைய 22,500 உறுப்பினர்களுக்கும் பணமாகவே பொருளாகவோ சரிசமமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டோம். அந்த உதவி, இரண்டு, மூன்று மாதங்களுக்கு உயிர் வாழக்கூடியதாக இருந்தது. இப்போது மறுபடியும் ஊரடங்கு தொடர்கிறது. இப்போது திரைப்படக் கலைஞர்களிடம் மறுபடியும் எப்படி பணம் கேட்கமுடியும்?

சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மீதி 16,000 பேருக்கு மேல் வேலையில்லாமல் உள்ளார்கள். திரைப்படப் படப்பிடிப்புகள் தொடங்கினால் தான் அவர்களுக்கு வேலையளிக்க முடியும்.

அதனால் திரைப்படக் கலைஞர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். நீங்கள் பணமாகத் தரவேண்டாம். உங்கள் வாழ்நாளில் வருடத்துக்கு ஒரு நாளை எங்களுக்குக் கொடுங்கள். பிறகு எங்களால் எந்தக் குறையும் இல்லாமல் உயிர் வாழ முடியும், நாங்கள் என்று சொல்வது, 25,000 தொழிலார்களை. 

அமிதாப் பச்சன் 2, 3 நாள்களை ஒதுக்கி ஒரு சிறிய குறும்படம் தயாரித்து, அதன்மூலமாக ரூ. 15 கோடி வரை நிதி திரட்டி, 60,000 தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கியுள்ளார். ஒருவரால் இதைச் செய்ய முடிகிறது. 

போன வாரம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு குறும்படம் செய்து அதன்மூலம் கிடைத்த 50,000 ரூபாயைக் கொண்டு 100 பேருக்கு மளிகைச் சாமான்களை வாங்கித் தந்துள்ளார். இது சிறு துளி தான். ஆனால் பெரிய நம்பிக்கையை விதைக்கிறது.

திரைப்படத்துறையில் நல்ல நிலைமையில் உள்ள கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் வருடத்துக்கு ஒரு நாளை ஒதுக்கித் தந்தால் இந்தத் தொழிலாளர்களால் பசியில்லாமல் வாழ முடியும்.

பெரிய மனது பண்ணி ஒரு நாளைக் கொடுங்கள். பிறகு, நாங்கள் யார் கையையும் ஏந்தவேண்டிய நிலையில்லை. சினிமாக்காரர்கள் என்றால் எந்தக் கஷ்டமும் இல்லை என மக்கள் நினைக்கிறார்கள். எங்கள் கஷ்டத்தை யாரிடம் போய் சொல்வது? எங்கள் கஷ்டத்தை அரசிடமும் சொல்லமுடியவில்லை. ஏற்கெனவே மூன்று முறை ஆயிரம் ரூபாய் என மூன்றாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டார்கள். திரைப்படக் கலைஞர்களும் பணமாகக் கொடுத்துவிட்டார்கள். மீண்டும் அவர்களிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. ஆனால் வருடத்தில் ஒரு நாளை எங்களுக்காக ஒதுக்கித் தாருங்கள். நாங்கள் உயிர் வாழ்கின்றோம் என்றார்.

TAGS
FEFSI RK Selvamani

Leave a Reply