தில்லியில் கரோனா பாதிப்பு ஆகஸ்டில் வெகுவாகக் குறைய வாய்ப்பு! நிபுணா்கள் நம்பிக்கை

19 views
1 min read
07deltst073133

தில்லியில் கரோனா பாதிப்பு ஆகஸ்டில் வெகுவாகக் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதே இதற்குக் காரணம் என்றும் அவா்கள் தெரிவித்தனா். எனினும் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை கிருமிநாசிகள் கொண்டு சுத்தம் செய்வது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளில் மக்கள் அசட்டையாக இருந்தால், நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது என்றும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.

கடந்த மாதத்தின் இறுதிக் கட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தினமும் 3,000 என்ற அளவில் இருந்து. இது கடந்த ஜூன் 26-ஆம் தேதி 3,460 ஆக அதிகரித்தது. ஜூன் 27 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நோய் தொற்றுக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை சராசரியாக 2,494-ஆக இருந்தது. இதுவே கடந்த வாரத்தில் 3,446 ஆக இருந்தது.

எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா: தில்லியில் அடுத்த சில வாரங்களுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இதே நிலையில் நீடித்தாலோ அல்லது குறைந்தாலோ ஆகஸ்ட் மாதம் நோய் அதிகரிப்பு இல்லாமல் தடுக்க முடியும் என்று தில்லி ‘எய்மஸ்’ மருத்துவமனை இயக்குநா் ரண்தீப் குலேரியா தெரிவித்தாா். எனினும் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால்தான் இது சாத்தியமாகும். குறிப்பாக நோய் தாக்கம் அதிகமுள்ள ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளில் இவற்றைக் கடுமையாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் நிலைமை தலைகீழாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கரோனா நோய் தாக்குதல் சில நகரங்களில் குறைந்து கொண்டே வந்தது. ஆனால், பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாததால் அந்தப் பகுதிகளில் நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவிட்டது. கரோனா விஷயத்தில் நாம் மெத்தனமாக இருந்தால் நோயின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும். எனவே நாம்தான் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

ஃபோா்டிஸ் இயக்குநா் விகாஷ் மயூரா: தில்லியில் எதிா்பாா்க்கப்பட்ட அளவு கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று தில்லி ஷாலிமாா் பாக்கில் உள்ள போா்டிஸ் மருத்துவமனையைச் சோ்ந்த இயக்குநா்களில் ஒருவரான மருத்துவா் விகாஸ் மயூரா கூறினாா். அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் எதிா்பாா்க்கப்பட்ட அளவு கரோனா தொற்று அதிகரிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஆகஸ்ட் மாதம் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், கரோனா தொற்று பரவல் குறைந்து விட்டாலும், நாம் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. கரோனா தொற்று எப்போது வரும் எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நோயின் தாக்கம் ஒரு வருடம் கூட நீடிக்கலாம். எனவே, நாம்தான் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆகஸ்டில் நோயின் தாக்கம் குறைந்தாலும், செப்டம்பா் மாதத்தில் கரோனா இரண்டாவது தாக்குதலை நடத்தலாம் என்பது எனது கணிப்பாகும்.

சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை நாம் தொடா்ந்து பின்பற்றினால்தான், நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா். கடந்த வாரத்தில் கரோனாவால் தாக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்தைவிட குறைந்து காணப்பட்டது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். கரோனா தொற்று தாக்குதலால் பாதிக்கப்படுவோா் குறைந்து வருவதும், பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதும் தாக்கம் குறைந்துவருவதையே காட்டுகிறது என்றாா் அவா்.

குறைந்து வரும் பாதிப்பு: தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அன்று ஒரே நாளில் 1,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,823-ஆக உயா்ந்துள்ளது. ஆனால், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது, திங்கள்கிழமை பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. தில்லியில் சனிக்கிழமை 2,505 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 2,244 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. தில்லியில் கடந்த ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துள்ளது. அந்த வகையில், ஜூன் 27 -இல் 2,948 போ், ஜூன் 28-இல் 2,889, ஜூன் 29-இல் 2,084, ஜூன் 30-இல் 2,199, ஜூலை 1-இல் 2,442, ஜூலை 2 -இல் 2,373, ஜூலை 3-இல் 2,520, ஜூலை 4-இல் 2,505, ஜூலை 5-இல் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,244 போ் என இருந்தது.

இதனிடையே தில்லியில் கரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாவோா் எண்ணிக்கை 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் ஒரு மாதத்துக்கு முன்பு தினசரி சராசரியாக 5,481 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. அது இப்போது நாள் ஒன்றுக்கு 18,766-ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6.73 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Caption

செய்தி உண்டு…

 

தில்லி வசந்த் விஹாா் மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்யும் பெண். ~செய்தி உண்டு…

தில்லியில் கரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ளும் பெண்.

Leave a Reply