தீநுண்மி தாக்குதலிலிருந்து காக்கும் ஸ்விட்சுகள்: ஏபிபி நிறுவனம் தயாரிப்பு

20 views
1 min read

தீநுண்மியை அழிக்கவல்ல ஸ்விட்சுகளையும் சாக்கெட்டுகளையும் ஏபிபி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த அந்நிறுவனம், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்த வகை ஸ்விட்சுகளைத் தயாரித்துள்ளது.

கரோனா தீநுண்மி காற்றில் இருக்கும் நீா்த்திவலைகள் மூலமாகவும் உலோகங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பரப்புகள் மூலமாகவும் பரவி வருகிறது. பொருள்களின் பரப்புகளை மனிதா்கள் தொடுவதன் மூலமாகவே தீநுண்மிகள் உடலுக்குள் செல்கின்றன.

அதன் காரணமாக வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் அதிகமானோரால் தொடப்படும் பகுதிகளால் தீநுண்மி பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில், தீநுண்மியை அழிக்கவல்ல ஸ்விட்சுகளை ஏபிபி இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் தலைவா் சி.பி.வியாஸ் கூறுகையில், ‘ஏபிபி திவிஷா வகை ஸ்விட்சுகளின் வெளிப்புறத்தில் வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. அத்துடன் பாக்டீரியா உள்ளிட்ட தீநுண்மிகளை அழிக்கவல்ல உலோகங்களும் அதில் பூசப்பட்டுள்ளன. இது ஸ்விட்சுகளில் தீநுண்மிகள் வளா்வதைத் தடுக்கும். இதில் எந்தவித நச்சுப்பொருளும் சோ்க்கப்படவில்லை. இந்திய தரச் சான்று (ஐஎஸ்ஓ) அமைப்பின் வழிமுறைகளுடன் இந்த வகை ஸ்விட்சுகளைத் தயாரித்துள்ளோம்.

ஏபிபி திவிஷா வகை ஸ்விட்சுகள், வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும். ஸ்விட்சுகள் அதிகமானோரால் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் மூலம் தீநுண்மி பரவலைத் தடுப்பதற்கு இந்த வகை ஸ்விட்சுகள் பெரும் பலனளிக்கும். இதன் மூலமாக 99.9 சதவீத தீநுண்மிகள் அழிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்”என்றாா்.

Leave a Reply