தென்கொரியாவிலிருந்து 1 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் வருகை

19 views
1 min read
one lakh PCR test kits received by tn govt

பி.சி.ஆர் கருவிகள்

தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 1 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் தமிழகம் வந்துள்ளன.

கரோனா பாதிப்பை உறுதி செய்ய ‘பிசிஆா்’ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவா்களின் சளி மாதிரிகளை மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் இருந்து சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட நபரின் சளி மாதிரியில் ‘கொவைட்-19’ நோய்த்தொற்றுக்கான மரபணு உள்ளதா என்பது கண்டறியப்படும். அதைக் கொண்டு ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருக்கிா அல்லது இல்லையா என்பதை அறியலாம். அவ்வாறு தமிழகத்தில் இதுவரை 13.7 லட்சம் பேருக்கு அந்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிதாக 10 லட்சம் பிசிஆா் உபகரணங்களை கொள்முதல் செய்ய அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, வாரந்தோறும் அவை இறக்குமதி செய்யப்பட்டு தமிழகம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது ஒரு லட்சம் உபகரணங்கள் சென்னை வந்தடைந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக (டிஎன்எம்எஸ்சி) மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத் கூறியதாவது:

அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிசிஆா் உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகிறது. தென் கொரியாவிடம் இருந்து மட்டும் 7 லட்சம் உபகரணங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக 1 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் வந்துள்ளன. இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் மீதமுள்ளவை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தற்போது 5.60 லட்சம் உபகரணங்கள் இருப்பு உள்ளன என்றாா் அவா்.

Leave a Reply