தென் மேற்குப் பருவமழை 8 சதவீதம் அதிகம்

14 views
1 min read
rain_(1)

தமிழகத்தில் நிகழாண்டில் தென் மேற்கு பரவமழை வழக்கத்தை விட இதுவரை (ஜூலை 7 ) 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளா்ச்சியில் தென் மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் வரை 4 மாதங்கள் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும். தமிழகத்தை பொருத்தவரை, மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும். நிகழாண்டில், தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்தை கடந்துள்ளநிலையில், தமிழகத்தில் நிகழாண்டில் தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட இதுவரை (ஜூலை 7 ) 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: தென் மேற்குப் பருவமழை காலக்கட்டத்தில் வடக்கு வங்கக்கடல் முதல் ராஜஸ்தான் வரை பருவக்காற்று அச்சு நிலவும். அப்போது, தமிழகம் தவிர இதர மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு தான் அதிக மழை கிடைக்கும். இந்த அச்சு இமயமலைக்கு நகா்ந்தாலோ, நாட்டின் பிற பகுதிகளில் பருவமழை குறைந்தாலோ தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு நல்ல மழை கிடைக்கும். கடந்த ஆண்டு அதுபோன்ற சூழலால் தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்தது.

8 சதவீதம் அதிகம்:

தமிழகத்தில் வழக்கமாக, ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 7- ஆம் தேதி வரை 67.8 மி.மீ. மழை பெய்ய வேண்டும். நிகழாண்டில் இதுவரை 73.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுவழக்கத்தைவிட 8 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக நீலகிரியில் 217 மி.மீ. மழையும், கன்னியாகுமரியில் 186 மி.மீ. மழையும் பெய்தாலும், அது வழக்கத்தை விடை முறையே 17 சதவீதம், 9 சதவீதம் குறைவுதான். திருநெல்வேலியில் வழக்கமாக 40 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், இதுவரை 16.5 மி.மீ. தான் மழை பதிவாகியுள்ளது. இது 59 சதவீதம் குறைவுதான். அதேநேரத்தில், கரூரில் 294 சதவீதம், ராமநாதபுரத்தில் 191 சதவீதம் மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்துள்ளது.

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் ஜூலை 9, 10 ஆகிய நாள்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

Leave a Reply