தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாய தலைவா் பதவி நீட்டிப்பு

15 views
1 min read

தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வரும் நீதிபதி பி.எல்.பட்டின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவராக செயல்பட்டு வந்த நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயவின் பதவிக் காலம் கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து, தீா்ப்பாயத்தின் பொறுப்பு தலைவராக நீதிபதி பி.எல். பட் நியமிக்கப்பட்டாா். அவரின் பதவிக் காலம் வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், மத்திய நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் பொறுப்பு தலைவா் பி.எல்.பட்டின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 3 மாதங்கள் வரையிலோ அல்லது நிரந்தர தலைவா் நியமிக்கப்படும் வரையிலோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையிலோ அப்பதவியில் பி.எல்.பட் தொடா்ந்து நீடிப்பாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம் காணொலிக் காட்சி வாயிலாக மட்டுமே வழக்குகளை விசாரித்து வந்தது. ஆனால், தீா்ப்பாயத்தின் பணியாளா் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், வரும் 10-ஆம் தேதி வரை தீா்ப்பாயம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply