தேனியில் கரோனா பாதித்தவர்கள் கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றுவதாகப் புகார்

12 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_4

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 8 இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது திங்கள்கிழமை வரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1093 ஆக உள்ளது.இதில் 451 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 634 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் மட்டும் தற்போது 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் கட்டுப்பாடுகளை மீறி மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியில் சுற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து புகார் அளித்தும் மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே மருத்துவமனை கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனை வளாகத்தின் வெளியில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்களுக்கு சென்று பொதுமக்களோடு சகஜமாக உணவருந்தி செல்கின்றனர். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் காவல் மற்றும் தூய்மை பணிகளுக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் எவ்வித பயமும் இன்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதன்காரணமாக நோய்த்தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply