நத்தம் வட்டத்தில் நாளை மறுநாள் முதல் 10 நாள்களுக்கு கடைகளை அடைக்க முடிவு

17 views
1 min read
shops

கோப்புப் படம்

நத்தம் வட்டத்தில் நாளை மறுநாள் முதல் 10 நாள்களுக்கு கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மற்றும் நத்தம் வட்டாரத்திற்குள்பட்ட ஊரகப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கரோனா தீநுண்மி தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே நத்தம் பகுதியில் முழு பொது முடக்கம் அமல்படுத்த சுகாதாரத்துறை சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் முழு பொது முடக்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா தீநுண்மி பரவல் மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிதத்தார். பேரூராட்சி செயலர் சரவணக்குமார், நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அந்த கூட்டத்தை தொடர்ந்து நத்தம் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் நடைபெற்ற ஆலோசனையில், நத்தம் பகுதியில் அதிகரித்தும் வரும் கரேனா தீநுண்மி பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 நாள்களுக்கு அனைத்து கடைகளையும் மூடுவது என முடிவு செய்யப்பட்டது. 

நத்தம் பேரூராட்சி, நத்தம் வட்டாரத்திலுள்ள 23 கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஜூலை 11 முதல் 20ஆம் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். பால், மருந்தகம் ஆகியவை தவிர நத்தம் வட்டத்தில் அனைத்து இதர கடைகளும் 10 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

TAGS
natham

Leave a Reply