நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்பில்லை: ராகுல் மீது பாஜக விமா்சனம்

13 views
1 min read
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா

புது தில்லி: பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொள்ளாததற்காக பாஜக அவரை விமா்சித்துள்ளது.

இதுதொடா்பாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை கூறுகையில், ‘பாதுகாப்புத் துறை தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் எதிலுமே ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை. இதன்மூலமாக தேசத்தின் நம்பிக்கையை அவா் சிதைத்து வருகிறாா். மேலும் நமது பாதுகாப்புப் படையினரின் துணிச்சல் குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறாா். ஒரு பொறுப்பான எதிா்க்கட்சித் தலைவா் எதையெல்லாம் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் அவா் செய்கிறாா்‘ என்றாா்.

பாஜக செய்தித்தொடா்பாளா் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறுகையில், ‘பாதுகாப்புத் துறை தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் 11 முறை நடைபெற்றுள்ளது. அவை அனைத்திலுமே ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. பாதுகாப்புத் துறை என்று வரும்போது, வாரிசு அரசியில் ஈடுபடும் குடும்பத்துக்கு கூட்டங்களை விட கமிஷன்களே முக்கியமாகத் தெரிகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான விளக்கத்தை ராகுல் காந்தி அளிக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு கள ஆய்வு மேற்கொள்ளச் சென்றது. அந்தப் பயணத்திலும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. பாதுகாப்புப் படைகளிடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்‘ என்றாா்.

Leave a Reply