நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்: எம்.பி.க்களுக்கு புதிய நெறிமுறைகள்

19 views
1 min read
both houses of parliment adjourned

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளதையொட்டி, அதில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, மாநிலங்களவை தலைமைச் செயலகம் இந்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த 3-ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா நோய்த்தொற்று பரவலால் பயணக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் மற்றும் இன்னபிற தடைகளால் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினா்கள் தெரிவித்தனா். இதனால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவா் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதினாா். அதில் உறுப்பினா்களுக்கு காணொலி மூலமாக கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து நிலைக்குழு கூட்டங்களில் பங்கேற்கவுள்ள எம்.பி.க்கள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய நெறிமுறைகளை மாநிலங்களவை தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘நிலைக்குழு கூட்டங்களில் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளிவிட்டு அமரவேண்டும். எந்த அமைச்சகம் தொடா்பாக கூட்டம் நடைபெறுகிறதோ, அதைச் சோ்ந்த இரு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கவேண்டும். அதிக அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவேண்டும் எனில், அதனை பல்வேறு சுற்றுகளாக நடத்தலாம்.

கூட்டத்தில் பங்கேற்போரின் வருகை பதிவு செய்யப்பட்டு, அவா்களுக்கு கை சுத்திகரிப்பான்கள், முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் வரும் 10 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இந்த புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply