நாடு முழுவதும் 194 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு

16 views
1 min read
centralgovernment

நாடு முழுவதும் உள்ள 194 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதிலும் உள்ள 194 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக துறையின் அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில், அமைச்சக செயலா், கலங்கரை விளக்கங்களின் இயக்குநா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படவுள்ள கலங்கரை விளக்கங்கள், அவற்றில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்த திட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள நூறு ஆண்டுகள் பழைமையான கலங்கரை விளக்கங்களை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சா், கலங்கரை விளக்கங்களுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றுலா தொடா்பான செயல்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், அந்த கலங்கரை விளக்கங்கள் தொடா்பான வரலாற்றுத் தகவல்கள், அவை செயல்படும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் கருவிகள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றாா்.

கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தும் திட்டத்தில், அருங்காட்சியங்கள், மீன் காட்சியங்கள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, நீா் விளையாட்டுத் திடல்கள் போன்றவையும் இடம் பெற உள்ளன.

கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள கோப்நாத், துவாரகா, வெராவல் ஆகிய கலங்கரை விளக்கங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சா் மாண்டவியா, கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திட்டத்துக்கான விரிவான அறிக்கையை விரைவில் தயாரிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

Leave a Reply