நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா: ஸ்டாலின் அறிவிப்பு

19 views
1 min read
nedunchezhian centenary function by DMK

திமுக சார்பில் வரும் 11 –ஆம் தேதியன்று நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக அக்கட்சித் தலைவர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

சென்னை: திமுக சார்பில் வரும் 11–ஆம் தேதியன்று நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக அக்கட்சித் தலைவர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சித்தொண்டர்களுக்கு புதனன்று எழுதியுள்ள கடிதம் வாயிலாக அவர் கூறியுள்ளதாவது:

நூறாண்டு கண்ட திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்து, தமிழகத்தின் ஊர்தோறும் தமிழ் மணம் பரப்பி, கொள்கைப் பற்றுடன் குன்றென உயர்ந்து நின்றவர் என்றென்றும் நம் மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள். கழகம் நடத்திய மும்முனைப் போராட்டம், விலைவாசி உயர்வுப் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தன் பங்களிப்பைச் செலுத்திய நாவலர் அவர்கள், 1967-ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடம் வகித்தவர்.பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழக அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, தலைவர் பதவிக்கு ஒருமனதாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டபிறகு, கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாம் இடமும் வகித்த நாவலரின் எண்ண உணர்வுகள் குறித்து தலைவர் கலைஞர் தன் வாழ்க்கை வரலாறான நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருப்பதுடன், பல நிகழ்வுகளிலும் அதனைப் பதிவு செய்திருக்கிறார்.

நாவலர் அவர்களின் நூற்றாண்டினை ஒட்டி, கடந்த 2019 ஜூலை 11 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழகப் பொருளாளருமான அண்ணன் துரைமுருகன் அவர்கள், “நடமாடும் பல்கலைக்கழகம் எனப் போற்றப்படுபவரும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறுபடாதவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு அரசின் சார்பில் விழா எடுக்கப்படும். அவரின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்” எனத் தெரிவித்தார்.

ஆளும் அரசின் துணை முதல்வரால் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட உறுதிமொழியினை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்திருந்தோம். ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், நாவலர் நூற்றாண்டு விழா குறித்து தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது வேதனை அளிக்கிறது.. அதனால், நாவலரை என்றும் மறவாத தி.மு.கழகத்தின் சார்பில் அவரது ‘நூற்றாண்டு நிறைவு விழா’ 11-7-2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், அறிவாலயத்தில் நாவலர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, மரியாதை செலுத்திப் போற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

வாழ்நாளெல்லாம் பகுத்தறிவு முழக்கம் செய்து, தந்தை பெரியாரின் கருத்துகளை எந்த மேடையிலும் வலுவாக எடுத்துரைத்து, பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை எடுத்துக்கூறி, தன் வாழ்வின் இறுதிவரை சுயமரியாதை உணர்வினைத் தமிழர்களுக்கு ஊட்டிய நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், சீரோடும் – சிறப்போடும், எழிலோடும் ஏற்றத்தோடும், மகிழ்வோடும் – நிறைவோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொண்டாடி, நாவலர் அவர்களின் புகழினைப் போற்றுவோம்!

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply