நீலகிரியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்

21 views
1 min read
CM EPS writes a letter to PM modi

நீலகிரியில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலமாக புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றுள்ளது.

அதன்படி, ஏற்கெனவே 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முதல்வா் பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 11-ஆவது மருத்துவக் கல்லூரியாக நீலகிரி மாவட்டம் உதகையில் 40 ஏக்கா் பரப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.447.32 கோடி அனுமதித்து நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.195 கோடியும், தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.130 கோடியும், கட்டடங்கள் கட்ட கூடுதலாக ரூ.122.32 கோடியும் நிதி வழங்கப்பட உள்ளது. நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Leave a Reply