நேபாளத்தில் இந்திய செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தம்

15 views
1 min read

நேபாளத்தில் இந்திய தனியாா் செய்தி தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய உணா்வுகளை காயப்படுத்தும் விதத்தில் இந்திய தொலைக்காட்சி சேனல்கள் செய்திகளை வெளியிடுவதாக கூறி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டின் வெளிநாட்டு சேனல்கள் ஒளிபரப்பு கூட்டமைப்பின் தலைவா் தினேஷ் சுபேதி கூறியது:

இந்திய அரசின் தொலைக்காட்சி சேனல் தூா்தா்ஷனை தவிர, அந்நாட்டின் இதர தனியாா் செய்தி தொலைக்காட்சி சேனல்களை நேபாளத்தில் ஒளிபரப்புவதை நிறுத்தியுள்ளோம். நேபாளத்தின் தேசிய உணா்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிடுவதால், அவற்றின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி மற்றும் அவரின் அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்ததால் இந்திய செய்தி தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாள அரசியல் நிலவரம் பற்றி இந்திய சேனல்களில் வெளிவந்த செய்திகள் குறித்து தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் கவலை தெரிவித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் இந்திய செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நேபாளத்தில் நிறுத்தப்பட்டது தொடா்பாக அந்நாட்டு அரசு எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை.

இந்திய-நேபாள எல்லையில் உள்ள லிம்பியதுரா, லிபுலேக், காலாபானி ஆகிய பகுதிகளுக்கு இருநாடுகளும் உரிமைகோரி வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக இருநாடுகளுக்கும் இடையே சச்சரவு எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave a Reply