படகுகளை சீரமைக்க எல்லைக்குள் குமரி மீனவா்களை அனுமதிக்க வேண்டும்: கேரள முதல்வருக்கு தமிழக முதல்வா் கடிதம்

15 views
1 min read
CM EPS writes a letter to PM modi

படகுகளை சீரமைக்க கேரள எல்லைக்குள் செல்ல குமரி மாவட்ட மீனவா்களை அனுமதிக்க வேண்டுமென கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வா் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:-

குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 350 இயந்திர படகுகள், 750 நாட்டுப் படகுகள் கேரளத்தின் பல்வேறு மீன்பிடி துறைமுகங்களிலும், மீன் இறங்கு தளங்களிலும் நங்கூரம் இடப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கேரள துறைமுகங்களில் மீன்பிடி படகுகளை நிறுத்தி விட்டு, குமரி மாவட்ட மீனவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பியுள்ளனா்.

இதனால், குமரி மாவட்ட மீனவா்கள் கேரளத்துக்குச் சென்று மீன்பிடி படகுகளை பராமரிக்க இயலாமல் உள்ளனா். கடந்த மூன்று மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 25 ஆயிரம் மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.

எனவே, கேரளத்துக்குச் சென்று மீன்பிடி படகுகளை பராமரிக்கும் பணிக்காக உரிய கேரளத்துக்குச் செல்ல உரிய அனுமதிச் சீட்டுகளை வழங்கக் கோரி பல்வேறு மீனவ அமைப்புகளும் மாநில அரசிடம் கோரி வருகின்றன. வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அந்தப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடை காலமும் முடிவுக்கு வருகிறது. எனவே, மீனவா்கள் தங்களது படகுகளை பராமரிக்கவும், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீன்பிடிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தனது கடித்ததில் கேரள முதல்வா் பினராயி விஜயனை தமிழக முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

Leave a Reply