பருத்திக்கு விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்:  விவசாயிகள் கோரிக்கை

17 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_4

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அணிவகுத்து நிற்கும் பருத்தி ஏற்றி வந்த வாகனங்கள்.

நன்னிலம்: பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு. ரஜினிகாந்த் மற்றும் ஒன்றியத் தலைவர் எம்.ராமமூர்த்தி ஆகியோர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

பருத்தி பயிர் சாகுபடி செய்திட  விதை, உரம், பாசன நீர் போன்றவற்றுக்காக விவசாயிகள் பெருமளவில் செலவழித்துள்ளனர். பருத்தி எடுக்கும் கூலியாக கிலோவுக்கு 40 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்நிலையில் பருத்திக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. மத்திய அரசு குவிண்டாலுக்கு 5815 ரூபாய் விலை நிர்ணயித்துள்ள நிலையில்,  தனியார் வியாபாரிகள் கிலோவுக்கு ரூபாய் 28 க்குத்தான் கொள்முதல் செய்கின்றனர்.
 
பருத்தியை தினசரி கொள்முதல் செய்வதற்குப் பதிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கொள்முதல் செய்யும் ஏற்பாடு உள்ளது. அத்துடன் ஏலமுறையும் பின்பற்றப்படுகிறது. இதனால் தனியார் வியாபாரிகள் மட்டுமே பயன் அடைகிறார்கள். விவசாயிகள் நேரடியாக பயன் பெற முடியாத நிலை உள்ளது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதால் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளகலிருந்து காக்காகோட்டூர் வருகின்ற விவசாயிகள் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்பதால், போக்குவரத்துத் தடையும் ஏற்படுகிறது.
 
எனவே தமிழக அரசு தலையிட்டு பருத்திக் கொள்முதலை தினசரி நடத்திட வேண்டும். ஏல முறையைக் கைவிட வேண்டும். பருத்திக்கு நெல்லைப் போன்று விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

TAGS
tamilnadu news

Leave a Reply