பழைய நோட்டுகள் செல்லாதா? சீர்காழி அருகே அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி

20 views
1 min read
salem

ரூ.1000, ரூ.500 நோட்டுகளுடன் மாற்றுத்திறனாளி உஷா, விமலா மற்றும் ராஜதுரை.

 

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது குறித்து இதுவரை தெரியாமல் மகள் திருமணத்திற்கு ரூ.35 ஆயிரம் சேர்த்துவைத்திருந்தார் மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர். 

சீர்காழி அருகே ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாதது என மத்திய அரசு அறிவித்தது தெரியாமல் ரூ.35 ஆயிரம் வரை தனது மகள் திருமணத்திற்குச் சேர்த்துவைத்திருந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி தற்போது விவரம் மற்றவர்களால் தெரிவிக்கப்பட்டவுடன் வேதனையுடன் உதவிகேட்டு கண்ணீர் வடிக்கிறார்.

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதிரவேளூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை(58) கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(52), மகள் விமலா(17), உஷாவும், விமலாவும் வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுதிறனாளிகள் ஆவர். 

இந்நிலையில் உஷா, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலைக்குச் சென்று வந்த கூலியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்துவந்துள்ளார். இவ்வாறு ரூ.1000 நோட்டுகள் 10, ரூ.500 நோட்டுகள் 51 என மொத்தம் ரூ.35,500 சேமித்து வைத்து அதனை ஒரு நெகிழிபையில் பத்திரமாக சுருட்டி, அதனுடன் அரை பவுன் தங்கம் தோடு ஆகியவற்றையும் வைத்து தனது கணவருக்கு தெரியாமல் தனது வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டி புதைத்து வைத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு பழைய ரூ.1000,ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த செய்தி குறித்து காது கேட்காத உஷாவும்,விமலாவும் அறியவில்லை. இந்நிலையில் ராஜதுரை தனது கூரை வீட்டை தமிழக அரசின் நிதியுதவியுடன் கட்டப்படும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் அனுமதி பெற்று வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார்.

வீடு கட்டும் பணிக்காகத் தொழிலாளர்கள் ராஜதுரை வீட்டின் பின்புறம் பள்ளம் வெட்டியபோது அங்கு நெகிழி பை ஒன்று சிக்கியது.அதனை வெளியே எடுத்துப் பார்த்தபோது அந்த பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய ரூ.1000,ரூ.500 நோட்டுகள் அதிகளவு இருந்தன. அதனை எடுத்துப் பார்த்தபோது ரூ.35.500 இருந்தது கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உஷாவிடம் தெரிவித்தனர். 

அந்த பணம் தனது மகள் திருமணத்திற்காக தான் சேர்த்து பத்திரமாக வைத்துள்ளேன் என சைகை மூலம் தெரிவித்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துவிட்டது என தெரிவித்ததும் உஷா, விமலா ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தனது கணவருக்கு தெரியாமல் என மகள் திருமணத்திற்கு சேர்த்துவைத்த பணம் இது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் எனக்கு தெரியாது.

காதுகேளாத எனக்கு இந்த தகவலை யாரும் சொல்லவில்லை.என்னிடம் இவ்வளவு பணம் இருப்பது எனது கணவருக்கே தெரியாது. எனது மகள் திருமணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. தமிழக அரசு இந்த ரூபாய் நோட்டை மாற்றிதர ஏதேனும் உதவி செய்யவேண்டும் என கண்ணீர் மல்க சைகை மூலம் தெரிவித்ததை அவரது கணவர் ராஜதுரை நம்மிடம் எடுத்துக் கூறினார்.

செல்லாத நோட்டுக்களை விவரம் தெரியாமல் மூதாட்டி சேர்த்துவைத்திருந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சோகத்துடன் மூதாட்டிக்கு ஆறுதல் கூறினர். தமிழக அரசு ஏழை மாற்றுத்திறனாளி மூதாட்டியின் மகள் திருமணத்திற்கு உதவிடும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply