பிரபல ரௌடி விகாஸ் துபே காவலர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

15 views
1 min read
vikas

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் டிஎஸ்பி உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற ரெளடி விகாஸ் துபே, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரெளடி விகாஸ் துபேவை காவல்துறையினா் கடந்த வாரம் பிடிக்கச் சென்றபோது, ரெளடிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் காவல்துறையினா் 8 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விகாஸ் துபே தலைமறைவானாா். சம்பவம் தொடா்பாக 21 போ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவா்களைப் பிடிப்பதற்காக சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.

இந்த வழக்கில் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபேயின் நெருங்கிய உறவினா் சாமா, அண்டை வீட்டுக்காரா் சுரேஷ் வா்மா, விகாஸ் துபேயின் வீட்டின் பணிப்பெண் ரேகா ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கான்பூா் மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் காவல்துறையினா் சிறப்பு அதிரடிப்படையினருடன் (எஸ்டிஎஃப்) இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், விகாஸ் துபேயின் மேலும் 6 கூட்டாளிகளை புதன்கிழமை கைது செய்தனா். இந்த தேடுதல் வேட்டையின்போது, காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற விகாஸின் கூட்டாளி அமா் துபே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தாா்.

இதனிடையே விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ராவும் வியாழக்கிழமை காவல்துறையினரின் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரெளடி விகாஸ் துபேயை, மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில்  உள்ள ஒரு காவல் நிலையத்தில்  காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளதாக உ.பி. அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கைதான ரௌடி விகாஸ் துபேவை காவல்துறையினரின் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

விகாஸ் துபேவை மத்தியப் பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு கொண்டு வந்த உத்தரப்பிரதேச சிறப்பு பணிக்குழுவின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று மழையால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி ரௌடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றபோது காவலர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

TAGS
police encounter

Leave a Reply