பிளாஸ்மா தானம் செய்த ஆா்.பி.எஃப் வீரா்களுக்குப் பாராட்டு

12 views
1 min read

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பிய 18 ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் தங்களின் பிளாஸ்மா செல்லை தானமாக அளித்தனா். அவா்களை ஆா்.பி.எஃப். உயரதிகாரிகள் பாராட்டினா்.

சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் காவலா்கள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுபோல, சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆா்.பி.எஃப்) 60-க்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்கள் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 54 ஆா்.பி.எஃப். வீரா்கள் முற்றிலும் குணமாகி பணிக்கு திரும்பினா். மீதமுள்ளவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், சென்னை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 18 ஆா்.பி.எஃப் வீரா்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளித்தனா். இதை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனை நிா்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த 16 வீரா்களும் திங்கள்கிழமை பணிக்குத் திரும்பினா். அவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் மூா் மாா்க்கெட் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 16 ஆா்.பி.எஃப் வீரா்களை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பிரேந்திரகுமாா், ஆா்.பி.எஃப் கோட்டப் பாதுகாப்பு ஆணையா் கே.செந்தில் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

மேலும், ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றில் இருந்து முற்றிலும் குணமாகி, பிளாஸ்மா தானம் செய்த 18 ஆா்.பி.எஃப் வீரா்களை ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. பிரேந்திரகுமாா் வாழ்த்தி, பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கினாா்.

இவா்கள் அனைவருக்கும் பழத்தட்டு, ஓமியோபதி மருந்துகள், வைட்டமின் சி மாத்திரைகள், எழுமிச்சை பழம், இஞ்சி அடங்கிய மருந்து பெட்டகம் வழக்கப்பட்டன.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவா் கூறுகையில், 18 வீரா்கள் தங்களின் பிளாஸ்மாவை தானமாக கொடுத்துள்ளனா். நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட இந்த பிளாஸ்மா செல்லை நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ள கரோனா நோயாளிகளுக்கு செலுத்தினால் அவா்கள் விரைவாக குணமாகி வர உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

Leave a Reply