பிள்ளைப்பாக்கம் பகுதியில் பொதுஇடங்களில் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகள் 

5 views
1 min read
waste

பொதுஇடங்களில் கொட்டப்படும் தொழிற்சாலை கழிவுகள்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் பொது இடங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் கொட்டப்படும் தனியார் தொழிற்சாலை கழிவுகளால் அப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளைபாக்கம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அலுமினியம் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் அலுமினியத்தை உருக்க கொதிகலன்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த மண்ணை தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடந்த சில தினங்களாக தொழிற்சாலைகளிலிருந்து லாரிகளில் ஏற்றி பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் கொட்டி வருகின்றனர். 

மேலும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த இந்த மண்ணை தொழிற்சாலை நிர்வாகத்தினர் இலவசமாக வழங்கி வருவதால் மண்ணில் கலந்துள்ள நச்சு தன்மை பற்றி அறியாத அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள பள்ளங்களில் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ரசாயனம் கலந்த மண்ணை தொழிற்சாலை நிர்வாகத்தினர் பிள்ளைபாக்கம் பகுதியில் பல இடங்களிலும் கொடி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் அலுமினிய தொழிற்சாலை நிர்வாகத்தினர், தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் (கார்பன்) கலந்த மண்ணை லாரிகளில் ஏற்றிவந்து அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி பிள்ளைபாக்கம் பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான இடங்கள், சிப்காட் நிர்வாகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் கொட்டி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில்  மழைநீர் வெளியேற முடியாமல் குடியிறுப்பு பகுதிகளுக்கு மழைநீர் தேங்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்ககூடிய நிலை ஏற்படும். 

ரசாயணம் கலந்த இந்த மண்ணால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே ரசாயணம் கலந்த மண்ணை கிராமத்தின் பல பகுதிகளிலும் கொட்டியுள்ள  தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

TAGS
Industrial waste

Leave a Reply