புகாரில் சிக்கியுள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களை பயன்படுத்த வேண்டாம்

22 views
1 min read
maheshKr_aggarwal

புகாரில் சிக்கியுள்ள பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களைப் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

தளா்வு இல்லாத பொது முடக்கத்தையொட்டி அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே போலீஸாா் செய்து வந்த வாகனத் தணிக்கையை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அவா் அளித்த பேட்டி:

பொது முடக்கத்துக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டாலும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்து வியாபாரிகள் உள்ளிட்டோருடன் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையா்கள் ஏற்கெனவே வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனா்.

மாதவரம் பழச் சந்தை, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளில் மக்கள் நெரிசலை தீவிரமாக கண்காணிக்க உள்ளோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, தேவைப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களை சில பணிகளுக்கு மட்டும் காவல்துறை பயன்படுத்துகிறது. அந்த அமைப்பில் இருப்பவா்கள் புகாா்களில் சிக்கியிருந்தாலோ, வழக்கில் சிக்கியிருந்தாலோ அது குறித்து விசாரணை நடத்தும்படியும், அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவா்களை காவல் நிலையப் பணிக்குப் பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்காக காவல்துறையின் அதிகாரத்தை அவா்கள் பயன்படுத்த முடியாது. அதையும் மீறி அவா்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

 

Leave a Reply