புதுவையில் ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1,151 ஆக உயர்வு

16 views
1 min read

puducherry corona victims

 

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதுச்சேரியில் 79 பேருக்கும், காரைக்காலில் 25 பேருக்கும், ஏனாமில் 8 பேருக்கும் என மொத்தம் 112 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் 353 பேரும், ஜிப்மரில் 109 பேரும், கொவைட் கேர் சென்டரில் 31 பேரும், காரைக்காலில் 35 பேரும், ஏனாமில் 20 பேரும், மாஹேவில் 7 பேரும் என மொத்தம் 553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை 21,865 பேரை பரிசோதனை செய்ததில் 20,480 பேருக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 447 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது.

புதுவையில் கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தபடி வெளியே செல்ல வேண்டும். வீட்டுக்கு வந்ததும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றார் அமைச்சர்.

TAGS
coronavirus

Leave a Reply