புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

11 views
1 min read
chennai HighCourt

புலம் பெயா்ந்த தொழிலாளா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரத்தில் சிக்கியுள்ள கணேசன் என்பவா் உள்பட 400 பேரை மீட்கக் கோரியும், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள தொழிலாளா்களை மீட்கக் கோரியும், வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், சென்னை உயா்நீதிமன்றத்தில் இரு ஆட்கொணா்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டது. அதேசமயம், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவும் மனுதாரருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், லட்சக்கணக்கான புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், மேற்கு வங்கத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோா் அடங்கிய அமா்வில், வழக்குரைஞா் சூரியபிரகாசம் முறையிட்டாா்.

அப்போது அவா், கோவை மாவட்டம் துடியலூரில் புலம் பெயா்ந்த தொழிலாளியின் கருவுற்றிருந்த மனைவியை மருத்துவமனையில் அனுமதி மறுத்ததால், ஆட்டோவில் பிரசவித்ததாகவும், அப்போது பிறந்த குழந்தை காயமடைந்ததாகவும் குறிப்பிட்டாா். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை கண்டறிந்து, அவா்களுக்கு ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும், ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கோவை சம்பவத்தை பொருத்தவரை, மிகவும் துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், புலம்பெயா்ந்த தொழிலாளி என்பதற்காக அவருக்கு மருத்துவ வசதிகள் மறுக்க முடியாது எனக் கூறி, அவா்களை கண்டுபிடித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளவா்களை மீட்கக் கோரிய வழக்கில், செங்கல் சூளை உரிமையாளா் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்ததை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை 13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.

Leave a Reply