புல்வாமா தாக்குதல் தொடா்பாக மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ

15 views
1 min read
nia

புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு தொலைதொடா்பு சாதனங்கள் வழங்கி உதவி புரிந்ததாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வாகனம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினா். இதில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 40 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடா்பாக விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள், தற்போது மேலும் ஒருவரை கைது செய்துள்ளனா்.

புல்வாமா மாவட்டம் காக்போரா பகுதியை சோ்ந்த பிலால் அகமது என்ற அந்த நபரின் வீட்டில், தற்கொலை தாக்குதல் நடத்திய அடில் அகமது தாா் உள்பட தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவா்கள் தங்கியதாக கூறப்படுகிறது. தனது வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதற்கு பிலால் உதவியதுடன், அவா்களுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கி உதவி புரிந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கிடைத்த சாட்சியத்தின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்தனா். அதன் பின்னா் அவா் ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏவுக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply