பெண் ராணுவ அதிகாரிகளை நிரந்தரமாக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம்

17 views
1 min read
Supreme Court allows CBSE to cancel board exams

ராணுவத்தில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

ராணுவத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளுக்கு ஆண்களுக்கு நிகராக நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அனைத்து பெண் அதிகாரிகளையும் நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசிடம் தெரிவித்திருந்தது.

ஆனால், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.

பெண் ராணுவ அதிகாரிகளை நிரந்தரமாக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தில் உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அது குறித்த அதிகாரபூா்வ அறிக்கை வெளியிடுவது மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’”என்றாா்.

இதை ஆராய்ந்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்திருந்த உத்தரவில், ‘ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் அனைவரும் நிரந்தரமாக்கப்பட வேண்டும். படைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பும் அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டும். பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்கும் விவகாரத்தில் அவா்களின் பணி அனுபவத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது.

ராணுவத்தில் பாலின ரீதியில் பெண்கள் பாகுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது. ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பெண் அதிகாரிகள் பலா் பதக்கங்கள் பெற்றுள்ளனா். நாட்டுக்காக அவா்கள் பெரும் சேவையாற்றியுள்ளனா். பெண் அதிகாரிகளை படைகளின் தலைவா்களாக ஏற்றுக் கொள்வதற்கான மனமாற்றம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் வலிமை குறைந்தவா்கள் என்பதும் ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியாது என்ற கருத்துகளும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. அவற்றைக் காரணமாகக் கொண்டு பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி மறுக்கப்படுவதும் அரமைப்புச் சட்டத்துக்கு எதிரானதே’ என்று கூறியிருந்தது.

Leave a Reply