பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

21 views
1 min read
perambalur

பெரம்பலூரில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசாயிகள்

 

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு சிலைக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விவசாயிகள், விவசாயிகளுக்கான பல்வேறு கட்ட போராட்டங்களின்போது உயிர்நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மக்காச்சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட விவசாய விளைபொருள்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை சட்டப்பூர்வமாக்கி, அதன்படி விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்.  

கரோனா பொது முடக்கக் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுத்தப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்களை நாடுவதால் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும். விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்று மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளைத் தட்டி, பருத்திகளை மாலையாக அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம், மாவட்டச் செயலர்கள் எம்.எஸ். ராஜேந்திரன், வி. நீலகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

TAGS
ஆர்ப்பாட்டம்

Leave a Reply