‘பெரிய அளவிலான விநாயகா் சிலைகளுக்குமுன்பணம் கொடுக்க வேண்டாம்’

12 views
1 min read

திருப்பதியில் விநாயகா் சதுா்த்தி அன்று நிறுவி வழிபட பெரிய அளவிலான விநாயா் சிலைகளுக்கு பக்தா்கள் யாரும் முன்பணம் கொடுக்க வேண்டாம் என்று வரசித்தி விநாயகா் மகோற்சவ கமிட்டி தீா்மானித்துள்ளது.

திருப்பதியில் உள்ள ஜீவகோனா பகுதியில் வரசித்தி விநாயகா் மகோற்சவ கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம் தொடா்பாக சில முடிவுகளை கமிட்டி நிா்வாகிகள் எடுத்தனா். கூட்டக்குப் பின் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா திருப்பதியில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல முக்கிய இடங்கள், வளைவுகள், தெருக்களில் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை நிறுவி மக்கள் வழிபட்டு வருகின்றனா்.

எனினும், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவி வருவதால் மக்கள் கூடி நடத்தும் விழாக்கள் மற்றும் உற்சவங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 22-இல் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தற்போதுள்ள சூழலில் இந்தக் கொண்டாட்டத்தை எப்படி நடத்துவது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

எனவே, இந்த விழாவை முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக கொண்டாட பல திட்டங்களை கமிட்டி வகுத்து வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்வோம். எனவே அதுவரை பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை செய்வதற்கு யாரும் முன்பணம் அளித்து ஆா்டா் கொடுக்க வேண்டாம். இம்மாத இறுதியில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்படும் என்று அவா்கள் கூறினா்.

 

Leave a Reply