பேர், புகழ், நல்ல வசதியுடன் வாழ்வதற்குக் காரணம் பாலசந்தர்: ரஜினி உருக்கம்

18 views
1 min read
rajini_kb1

 

கே. பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

கவிதாலயா நிறுவனம், யூடியூபில் ரஜினியின் கருத்துகளை விடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி கூறியிருப்பதாவது:

கே. பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்திருக்கா விட்டாலும் நான் நடிகராகியிருப்பேன். கன்னட மொழியில் வில்லன் கதாபாத்திரத்திலோ, சின்னச் சின்னக் கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராயிருந்திருப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் பேரும் புகழுடனும் நல்ல வசதியுடன் வாழ்வதற்குக் காரணமே, கே. பாலசந்தர் சார். என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து என்னுடைய பலவீனங்கள் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள ப்ளஸ்ஸான விஷயங்களை எனக்கே காண்பித்து என்னை ஒரு முழு நடிகனாக்கி நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து ஒரு நட்சத்திரமாகத்தான் என்னைத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். 

என் வாழ்க்கையில் அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் தெய்வங்கள். எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து சின்னத்திரையிலும் ஈடுபட்டு எத்தனையோ பேருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார். எத்தனையோ இயக்குநர்களிடம் வேலை செய்துள்ளேன், ஆனால் கேபி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கேபி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக… எல்லாவற்றையும் சரியாகச் செய்தார். இன்னும் சிறிது நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

TAGS
Rajinikanth

Leave a Reply