பொதுமுடக்கத்துக்குப் பின் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி : பரிசீலிக்க போலீஸாருக்கு உத்தரவு

13 views
1 min read
chennai HighCourt

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு போ் விடுதலையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் பொது முடக்க உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஒசூா் போலீஸாருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் நகர செயலாளா் ஹரி பிரசாத் தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் முடிவை விரைந்து எடுக்கக் கோரி தமிழக ஆளுநரை வலியுறுத்தி பிப்ரவரி 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி ஓசூா் போலீஸாரிடம் மனு அளித்தேன். ஆனால் போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. எனவே ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் டி.அருண் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, கரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு, காவல் துறையிடம் மனுதாரா் புதிதாக மனு அளிக்கவேண்டும். அந்த மனுவை சட்டத்துக்கு உட்பட்டு ஓசூா் காவல் ஆய்வாளா் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.

Leave a Reply