பொது முடக்கம் எதிரொலி: நாமக்கல் கூண்டு கட்டும் பட்டறைகளில் காத்திருக்கும் லாரிகள்

16 views
1 min read
lorry

கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி லாரி தொழிலை மட்டுமல்லாமல், லாரிகளுக்கு கூண்டு கட்டும் தொழிலையும் (பாடி பில்டர்ஸ்) அதிகம் பாதிப்படையச் செய்துள்ளது. லாரி கூண்டு கட்டு”ம் பட்டறைகளில் இருந்து வெளியேறாமல் நிற்கும் லாரிகளால், அதனை நம்பியுள்ள சார்பு நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் லாரி கூண்டு கட்டும் தொழிலைப் பொருத்தவரை நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நடைபெறுகிறது. இத்தொழிலில் நாமக்கல், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். கர்நாடகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பழைய, புதிய லாரிகளுக்கு கூண்டு கட்டுவதற்கு நாமக்கல்லை நாடி வருகின்றனர்.
 கரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார முடக்கம் இத்தொழிலையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக லாரி கூண்டு கட்டும் பட்டறைகள் மட்டுமின்றி, பெயின்டிங் பட்டறை, வெல்டிங் பட்டறை, டிங்கரிங், மரம் இழைப்புப் பட்டறை, வாகனங்களுக்கு பேட்டரிகளைப் பொருத்தி மின் இணைப்பு வழங்கும் பட்டறைகள், கண்ணாடிக் கடைகள் உள்பட 2,500-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் முடங்கியுள்ளன.
 போதிய வருவாய் இல்லாத நிலையிலும் பிழைப்புக்காக மட்டும் பட்டறைகளில் தொழிலாளர்கள் தற்போது வேலை பார்த்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய லாரிகளை உடைக்கும் பணிகள்தான் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
 இது ஒருபுறமிருக்க, லாரியின் இயக்க பாகத்தை (சேசிஸ்) தவிர்த்து, மற்ற பகுதிகளில் கூண்டு (பாடி) அமைக்கும் பணி நடைபெறும் பெரிய பட்டறைகளில், லாரிகள் தயாராகி அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், ஆர்டர் கொடுத்தவர்கள் வாங்க வராததால் புதிய லாரிகள் பழைய லாரிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு லாரி கூண்டு கட்டும் பட்டறைகள் சங்கச் செயலர் எம்.புகழேந்திரன் கூறியதாவது:
 லாரிகளுக்கு கூண்டு கட்டும் பணிமனைகள் அதிகம் உள்ள மாவட்டம் நாமக்கல். ஒரு லாரிக்கு கூண்டு கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகும். லாரியின் திறனைப் பொருத்து இந்தக் கட்டணம் மாறுபடும். கரோனா பொது முடக்கம் இத்தொழிலை வெகுவாக பாதித்துள்ளது.
 தற்போதைய நிலையில், ஊரில் இருக்கும் தொழிலாளர்களுக்காக மட்டுமே பட்டறைகள் செயல்படுகின்றன. முன்தொகை கொடுக்காமல் யாரும் ஆர்டர் கொடுக்க மாட்டார்கள். புதிய லாரிகளைத் தயார் செய்ய ஆர்டர் கொடுத்தவர்கள் 4 மாதங்களுக்கு மேலாகியும், பணி முடிவடைந்த தங்கள் லாரிகளை எடுக்க முன்வரவில்லை.
 பொது முடக்கம் அமலில் இருப்பதால் லாரிகளின் இயக்கம் அதிக அளவில் இல்லை. அதனால் தங்கள் லாரிகளை தாமதமாக எடுத்துக் கொள்ளலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம்.
 பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களில் லாரி கூண்டு கட்டும் பட்டறைகள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பொது முடக்கம் முழுமையாக விலக்கப்பட்டால் மட்டுமே எங்களது தொழில் மீட்சி அடையும் என்றார்.

“ஸ்கிராப்பிங் பாலிசி’ மாறுமா?
 லாரி கூண்டு கட்டும் தொழில் முடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு உத்தேசித்துள்ள “ஸ்கிராப்பிங் பாலிசி’யால் லாரி உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கச் செயலர் கே.அருள் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளதாவது:
 கரோனா தொற்றுப் பரவல், பொது முடக்கம் போன்ற நெருக்கடியான சூழலில், டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியது போன்றவை லாரி தொழிலை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளன. லாரிகளுக்கு சரியான லோடு கிடைக்காததால், 50 சதவீத லாரிகளே இயக்கப்பட்டு வருகின்றன.
 இந்த நிலையில், மத்திய அரசு “ஸ்கிராப்பிங் பாலிசி’ எனும் கொள்கையை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்மூலமாக, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 1.50 லட்சம் லாரிகளை இயக்க முடியாத சூழல் உருவாகும்.
 அத்தகைய சூழலில், ஒன்றிரண்டு லாரிகளை வைத்துள்ள உரிமையாளர்கள் தொழிலில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். பலர் லாரி தொழிலை விட்டு மாற்றுத் தொழிலை நாடிச் செல்லும் நிலை உருவாகும்.
 கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஸ்-6 வகை வாகனங்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை தற்போதைய லாரிகளைவிட 20 சதவீதம் அதிகமாகும். 15 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளை அரசு நிர்ணயிக்கும் விலைக்கு கொடுத்துவிட்டு புதிய பிஎஸ்-6 வகையிலான வாகனங்களை வாங்குவது சாத்தியமற்றது.
 சிறு லாரி உரிமையாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக மாற்றி, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நெருக்கடியில்லாமல் செயல்படுத்திய பின்னர், அந்தக் கால அளவை 15 ஆண்டுகளாகக் குறைக்கலாம்.
 இவ்வாறு “ஸ்கிராப்பிங் பாலிசி’யை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி பிஎஸ்-6 வகை வாகனங்கள் செயல்பாட்டை அமல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply