பொது முடக்கம் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கும்: முதல்வர் பழனிசாமி

18 views
1 min read
CBI investigation for Sathankulam father- son death: CM announcement

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 
பொது முடக்கம் தொடர்ந்து கொண்டேயிருந்தால், பொருளாதாரம் பாதிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு, மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். அதன்பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கரோனா பரவலைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்கள்தான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுடைய முழு ஒத்துழைப்பால்தான் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை எந்த அளவுக்கு பொதுமக்கள் பின்பற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு நோய்த் தொற்று பரவலைக் குறைக்க முடியும்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விட்டால், அவருடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து, அவர்களுக்கும் தொற்று இருந்தால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு: முழு பொது முடக்கம் பலன் அளித்தாலும், சென்னையில் அதை ஏன் நீட்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறீர்கள். வாழ்வாதாரம் என்பது மிகப் பெரிய சவால். ஒரு பக்கம் நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டும். அதேவேளையில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை.

பொது முடக்கத்தை தொடர்ந்து அமல்படுத்தினால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுவிடும். எனவேதான், பொது முடக்கம் மூலமாக முடிந்த அளவு நோய்ப் பரவலைத் தடுத்து, மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

பொது முடக்கத்தின் மூலமாக பல சிரமங்கள் ஏற்பட்டாலும், கரோனா தொற்று பரவல் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்படிச் செய்தால், நோய் பரவல் நிச்சயமாகக் குறையும் என்றார் முதல்வர் பழனிசாமி.

முன்னதாக, மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply