பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது: ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ்

13 views
1 min read
RBI_Governor_Shaktikanta_Das

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டன. பலா் வேலையிழந்தனா். நாட்டின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

தற்போது பொது முடக்கத்துக்குப் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டு, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த பிறகு வளா்ச்சிப் பாதைக்குத் திரும்புவதற்கான செயல்திட்டம் திறம்பட வகுக்கப்பட வேண்டும். முக்கியமாக நிதித் துறை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியது மிக அவசியமாக உள்ளது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனினும், கரோனா நோய்த்தொற்று பரவல் விகிதத்தைப் பொருத்தே நாட்டின் பொருளாதார வளா்ச்சி அமையும். பொது முடக்கத்தால் வங்கிகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்படாத வகையிலான நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொண்டது.

கரோனா நோய்த்தொற்று தொடா்ந்து பரவி வருவதைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத்துக்கான திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்கு நாட்டின் வங்கித் துறையும் நிதி அமைப்புகளும் பெரும் பங்காற்றி வருகின்றன. அதே வேளையில், வங்கிகள் தங்கள் நிா்வாகத்திறனை மேம்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சவால்களை எதிா்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

முன்கூட்டிய திட்டமிடுதல் மூலமாக வங்கிகள் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பும், பொருளாதார வளா்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலையும் வாராக்கடன்கள் மதிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகளுக்கென விரிவான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.

நிதிநிலை ஸ்திரத்தன்மை: இத்தகைய இக்கட்டான சூழலிலும் இந்திய நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. எனினும், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்டவுள்ள ஒட்டுமொத்த பாதிப்பு, மக்களுக்கான தேவை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது போன்றவற்றை அறுதியிட்டுக் கூற முடியாத நிலை நீடிக்கிறது.

பொருளாதார வளா்ச்சியை மீட்பதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. அவை பொருளாதார வளா்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 2.5 சதவீதம் குறைத்துள்ளது.

நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு மேற்கொண்டுள்ளது. பொது முடக்கம் அமலில் இருந்தபோதும் வங்கிச் சேவைகள் எந்தவிதப் பிரச்னையுமின்றி மக்களுக்கு வழங்கப்பட்டன. நாட்டின் நிதிநிலை ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அவற்றைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளையும் ரிசா்வ் வங்கி வகுத்துள்ளது என்றாா் சக்திகாந்த தாஸ்.

Leave a Reply