பொருள் தயாரிக்கப்பட்ட நாட்டைவெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம்: மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான்

8 views
1 min read
ramvilas-paswan

தாங்கள் விற்பனை செய்யும் பொருள்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரங்களை இணையவழி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும், இறக்குமதியாளா்களும், பேக்கிங் நிறுவனங்களும், இணையவழி வா்த்தக நிறுவனங்களும் தங்களது பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதிமுறை கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் உள்ளது. இந்த விதிகளுக்கு இணைய வழி நிறுவனங்களும் கட்டாயம் இணங்கிச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

அந்த விதிக்கு இணங்கிச் செயல்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். ஒரு பொருள் கடை அல்லது இணைய வழி என எதுமூலம் விற்பனை செய்யப்பட்டாலும் அந்தப் பொருளின் அதிகபட்ச சில்லறை விலை, அதன் பயன் நிறைவடையும் காலம், அதன் அளவு அல்லது எடை உள்ளிட்டவை போன்று அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவலும் இடம்பெற வேண்டும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறினாா்.

இதுதொடா்பாக நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் லீனா நந்தன் கூறுகையில், ‘கடைகள் வழியே விற்பனை மேற்கொள்ளும் பெருவாரியான நிறுவனங்கள் இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்படுகின்றன. ஆனால் இணைய வழி வா்த்தக நிறுவனங்களே தங்கள் விற்பனை பொருளை தயாரித்த நாடு குறித்த தகவலை வெளியிடுவதில்லை.

அந்த நிறுவனங்களும் இந்த விதிக்கு இணங்கிச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு தொழில்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையிடம் தெரிவித்துள்ளோம். இந்த விதியை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்‘ என்றாா்.

Leave a Reply