போடியில் கரோனா பாதிக்காத தெருக்களில் தடுப்புகள்: பொதுமக்கள் அவதி

15 views
1 min read
bodi

போடியில் கரோனா பாதிப்பு இல்லாத தெருக்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

போடியில் கரோனா தொற்று அதிகமாகவும், வேகமாகவும் பரவியதையடுத்து நகர் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நகராட்சியில் கரோனா தொற்று இல்லாத தெருக்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போடி தலைமை அஞ்சலகம் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவில் தெரு, பெரியாண்டவர் நெடுஞ்சாலையுடன் இணையும் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

தலைமை அஞ்சலம் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்புகளே இல்லை. அருகில் உள்ள சந்தை பேட்டை தெருக்களில்தான் குடியிருப்புகள் உள்ளன. தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதி வழியாகத்தான் அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டும். தடுப்பு அமைக்கப்பட்டதால் அஞ்சலகத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியதுள்ளது. அஞ்சலகத்திற்கு வரும் வாகனங்கள், ஊழியர்களும் செல்ல முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதேபோல் போடி இந்திரா காந்தி சிலை அருகே ஏலக்காய் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் நின்று ஏலக்காய் விலை விபரம் குறித்து தகவல் பரிமாறிக் கொள்வார்கள்.

இவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இப்பகுதியில் மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களில் தடுப்பு அமைத்து விட்டனர். இதனால் மதுரைவீரன் தெரு, பழைய ஆஸ்பத்திரி தெருக்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் தடுப்பு அமைத்தவுடன் அருகிலுள்ள தெருக்களில் ஏலக்காய் வியாபாரிகள் கூட்டமாக நிற்கும் நிலை உள்ளது. ஏலக்காய் வியாபாரிகளுக்கு ஒதுக்குப்புறமான இடத்தையோ அல்லது திருமண மண்டபம் போன்ற பகுதியை ஒதுக்கிக் கொடுத்தால் அவர்கள் பொது இடத்தில் கூடுவதை தவிர்க்கமுடியும். இதைவிட்டுவிட்டு தடுப்பு அமைப்பதால் அப்பகுதி பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

போடி நகராட்சி காலனி பகுதியில் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நகராட்சி காலனியில் பல தெருக்கள் உள்ளன. அந்த தெருக்களில் மட்டும் தடுப்புகள் அமைத்தால் போதும். ஆனால் அதனையொட்டிய சாலையையும் தடுப்புகள் அமைத்து மூடிவிட்டனர். இதனால் இந்த சாலை வழியாக தென்றல் நகர், சோலை சொக்கலிங்கம் நகர், ஜக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாதநிலை உள்ளது. இதுபோல் போடியில் கரோனா நோய் தொற்று கண்டறியப்படாத பல தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், நகராட்சி குப்பை வாகனங்கள் குப்பை சேகரிக்க செல்ல முடியவில்லை.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள், காய்கனி விற்பனைக்கு செல்லும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. போடி பகுதி கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கூட்டமாக கூடுபவர்களை உரிய அறிவுரை கூறி அப்புறப்படுத்திவிட்டு தடுப்புகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

TAGS
Bodinayakanur

Leave a Reply