போடி அருகே தொகுப்பு வீடு இடிந்து சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

15 views
1 min read
இடிந்து விழுந்த தொகுப்பு வீடு

இடிந்து விழுந்த தொகுப்பு வீடு

போடி:    போடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போடி அருகே தம்மிநாயக்கன்பட்டியில் உள்ளது இந்திரா காலனி. இந்த காலனியில் கடந்த 1989-ஆம் ஆண்டில் 25 குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் அரசால் கட்டித் தரப்பட்டன.

அதன் பின் இந்த வீடுகள் பராமரிப்பு செய்யப்படவில்லை. பல வீடுகளில் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி சேதமடைந்து கம்பிகள் தெரிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு  இந்திரா காலனியை சேர்ந்த லிங்கமுத்து என்பவர் குடும்பத்துடன் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வீடு முழுவதும் சேதமடைந்தது. லிங்கமுத்து இவரது மனைவி, பிள்ளைகள் 2 பேர் என 4 பேரும் வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். 

இதனிடையே சேதமடைந்த வீடுகளை உடனே சீரமைத்து தர வேண்டும் என தம்மிநாயக்கன்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply