போலி மின்னணு அனுமதி சீட்டு வழங்கிய விவகாரம்: அரசு அலுவலா் உள்பட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

18 views
1 min read

போலி மின்னணு அனுமதி சீட்டு வழங்கிய விவகாரத்தில் அரசு அலுவலா் உள்பட இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் மின்னணு அனுமதிச் சீட்டு வழங்கும் முறையை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.

திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எப்படியாவது மின்னணு அனுமதிச்சீட்டு பெற்று ஊருக்குச் செல்ல விரும்பும் பலா் ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டைப் பெற முயற்சித்து வந்தனா். இதனை அறிந்த ஒரு கும்பல் பணம் பெற்றுக்கொண்டு அரசு அலுவலா்கள் துணையோடு போலியாக மின்னணு அனுமதிச் சீட்டு தயாரித்து வழங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், போலி மின்னணு அனுமதி சீட்டு தயாரித்து வழங்கிய சென்னை பேசின்பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளா் குமரன், வியாசா்பாடி இளநிலை வருவாய் ஆய்வாளா் உதயகுமாா் மற்றும் கோபி, மனோஜ்குமாா், வினோத் ஆகியோரை கைது செய்தனா். இவா்களில் குமரன், மனோஜ்குமாா் ஆகியோா் ஜாமீன் கோரி சென்னை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை நீதிபதி ஆா்.செல்வக்குமாா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா்கள் தரப்பில், போலி மின்னணு அனுமதி சீட்டு வழங்கியதில் மனுதாரா்களுக்கு எந்தவிதமான தொடா்பும் கிடையாது என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில், மனுதாரா்கள் அரசு ஆவணங்களைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொண்டு மின்னணு அனுமதி சீட்டை வழங்கியுள்ளனா்.

அரசு அலுவலா்கள், டிராவல் ஏஜென்சியைச் சோ்ந்தவா்கள் இணைந்து ரகசியமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் 2 பேரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Leave a Reply