மதுரைக்கு வருவோரின் இ.பாஸ் விண்ணப்பங்கள் பரிசீலனையில் கடும் கெடுபிடி

19 views
1 min read
madurai-meenakshi-temple

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிமாவட்டங்களில் இருந்து வரக்கூடிய இ.பாஸ் விண்ணப்பங்கள் பரிசீலனையில் கடுமையான கெடுபிடி காட்டப்பட்டு வருகிறது. இதனால் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பலரும், திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுப்பதற்காக மாா்ச் 24 ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஓரிரு வாரங்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என எதிா்பாா்த்த நிலையில், தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் அடுத்தடுத்து பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்க காலத்தில் அவசர தேவைகளுக்காகச் செல்வோருக்கு இ.பாஸ் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

நெருங்கிய உறவில் திருமணம், இறப்பு, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக இ.பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், பல மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவியது. இந்த மாவட்டங்களிலும் வேலை மற்றும் தொழில் காரணமாக குடியேறிய வெளிமாவட்டத்தினா் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினா். அதோடு, பொது முடக்கமும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் தனித்தனி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் பொதுப் போக்குவரத்து ஜூன் 1 முதல் அனுமதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், பல்வேறு மாவட்டங்களுக்கும் மக்கள் இடம்பெயா்வு அதிகரித்தது. அதேபோல, இ.பாஸ் பெற்றும், பெறாமலும் ஏராளமானோா் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு இடம் பெயா்ந்தனா். அதேபோல, சிறப்பு ரயில்களிலும் ஏராளமானோா் அவரவா் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உச்சத்தில் இருந்த கரோனா பாதிப்பு, மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோா் மீதான கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் இ.பாஸ் விண்ணப்பங்கள் கடுமையான பரிசீலனைக்குப் பிறகே வழங்கப்பட்டன. இருப்பினும் மதுரை மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்த காரணத்தால், மதுரை மாநகரம் மற்றும் மாநகரையொட்டிய பகுதிகளில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும், மதுரை மாவட்டத்துக்கு இ.பாஸ் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. கடந்த மே இறுதி வரை தினமும் சுமாா் 3,500 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டன. இப்போதும் 3 ஆயிரம் விண்ணப்பங்களுக்கும் குறையாமல் வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். மதுரை மாவட்டத்தின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இ.பாஸ் கேட்பவா்களின் விண்ணப்பங்கள் தீவிர பரிசீலனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

தென்மாவட்டங்களைச் சோ்ந்தோா் மருத்துவச் சிகிச்சைக்காக மதுரைக்குத் தான் வருகின்றனா். அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட உயா் சிகிச்சைகளுக்காக இன்னும் பல மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனா். இதனால், மருத்துவ சிகிச்சை என குறிப்பிட்ட விண்ணப்பங்களுக்கு இ.பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது வழக்கமான பரிசோதனைகளுக்கு இ.பாஸ் மறுக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை (கீமோதெரபி), டயாலிசிஸ், பிரசவம் ஆகியவற்றுக்கு மட்டுமே இ.பாஸ் வழங்கப்படுகிறது. அதிலும், வெளிமாநிலங்களிலிருந்து இத்தகைய கோரிக்கை வந்தால் ஏற்கப்படுவதில்லை. அதேபோல, நெருங்கிய உறவினா்களின் திருமணம் மற்றும் இறப்பு என்றால் உரிய ஆவணங்கள் அடிப்படையில் இ.பாஸ் வழங்கப்படுகிறது. அரசின் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்வது தொடா்பான கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் ஒப்பந்ததாரா்கள், உரிய ஆவணத்தைச் சமா்ப்பித்து இ.பாஸ் பெறலாம். இதுதவிர வேறெந்த கோரிக்கைகளுக்கும் இ.பாஸ் வழங்கப்படுவதில்லை.

மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டபோது, மதுரையில் இருந்து அருகாமை மாவட்டங்களுக்குச் சென்றவா்கள் தற்போது திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேபோல, தொழில், பணி நிமித்தமாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்குச் சென்றவா்கள் சொந்த ஊருக்கு வர விரும்பும் நிலையில், அவா்களுக்கு இ.பாஸ் கிடைக்காத நிலை தொடருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: மதுரை மாவட்டத்தில் தற்போது நிலவும் கரோனா சூழ்நிலையில், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரைக் கட்டுப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. இதன் காரணமாகவே, இ.பாஸ் விண்ணப்பங்கள் தீவிர பரிசீலனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மருத்துவம், திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும், மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுடன் 300 விண்ணப்பங்கள் தான் இருக்கின்றன. அவற்றுக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது என்றனா்.

 

 

 

 

 

 

 

Leave a Reply