மதுரையில் மேலும் இரு நாள்களுக்கு முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு

16 views
1 min read
tngov

கோப்புப்படம்

மதுரையில் முழு பொது முடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் இரு நாள்களுக்கு பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், மேலும் சில நாள்கள் பொது முடக்கத்தை நீட்டிக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 24.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு உத்தரவானது முதலில் 05.07.2020 வரையும், அதன் பின்னர் 12.07.2020 நள்ளிரவு வரையும் நீட்டித்து ஆணையிடப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்டபகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால், தற்போது நடைபெற்று வரும் தீவிர பணிகள் மூலமும், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து,  நோய்தொற்றினைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் என்பதால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டபகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 14.07.2020 நள்ளிரவு 12.00 மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் 14.07.2020 நள்ளிரவு 12.00 மணி முடிய தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு 14.07.2020 வரை அமலில் உள்ள மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், 15.07.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை, இப்பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இருந்த ஊரடங்கின் நிலை மீண்டும் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன நடவடிக்கையின் காரணமாக மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 

TAGS
மதுரை

Leave a Reply