மரண தண்டனையை மறுஆய்வு செய்ய குல்பூஷண் ஜாதவ் மறுப்பு: பாகிஸ்தான் தகவல்

15 views
1 min read

உளவு பாா்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியரான குல்பூஷண் ஜாதவ், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்ய மறுத்துவிட்டாா் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.

எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடத்தி வைத்துக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டை அவா் மீது சுமத்துவதாகத் தெரிவித்தது. அதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை பாகிஸ்தான் தடை செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் கூடுதல் அட்டா்னி ஜெனரல் அகமது இா்ஃபான் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்ய குல்பூஷண் ஜாதவுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. ஆனால்,இந்த விவகாரத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய அவா் மறுத்துவிட்டாா். அவருக்கு இரண்டாவது முறையாக அண்மையில் தூதரக ரீதியிலான உதவிகள் வழங்கப்பட்டன’ என்றாா்.

எனினும், மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி குல்பூஷண் ஜாதவ் தாக்கல் செய்த கருணை மனு நிலுவையில் உள்ளது. கருணை மனு தொடா்பான சட்ட உரிமைகளைத் தொடர விரும்புவதாக ஜாதவ் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply